இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காகவும், சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்குவதற்காகவும் இளைஞர்கள் தங்கள் உயிரையே பணயம் வைப்பது இப்போது ஒரு தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திருவிழா ஒன்றில் ராட்டினத்தில் இளைஞர் ஒருவர் செய்த ஆபத்தான ஸ்டண்ட் வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ‘@sk_sonu_1929’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், வேகமாகச் சுற்றும் ராட்டினத்தின் பெட்டியைப் பிடித்துக் கொண்டு ஒரு இளைஞர் அந்தரத்தில் தொங்குகிறார். ஒரு கட்டத்தில் பிடி நழுவி, கீழே விழப் பார்த்த அவர், அந்தப் பெட்டியில் அமர்ந்திருந்த ஒரு குழந்தையின் காலைப் பிடித்துத் தப்பிக்கும் காட்சி பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.
தன்னுடைய உயிர் மட்டுமல்லாமல், ராட்டினத்தில் அமர்ந்திருந்த பிஞ்சு குழந்தைகளின் உயிரையும் அந்த நபர் கேள்விக்குறியாக்கியுள்ளார். அந்தப் பெட்டியில் இருந்த குழந்தைகள் பயத்தில் உறைந்து போனது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. “இது சாகசம் அல்ல, அப்பட்டமான முட்டாள்தனம்” என நெட்டிசன்கள் அந்த இளைஞரைக் கடுமையாக விளாசி வருகின்றனர்.
“ஒரு சின்ன கைதவறல் நடந்திருந்தால் கூட, அந்த இளைஞர் கீழே விழுந்து உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்” எனப் பலரும் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த விபரீத விளையாட்டு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது!
