உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள தான்சாரி கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான யூசுப் கான். இவருக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணாகி தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர். யூசுப் கடந்த ஜூலை 29ஆம் தேதி ‘மார்க்கெட்டில் கூலித் தொழிலுக்கு போகிறேன்’ எனக் கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால், மாலை வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்து தேடத் தொடங்கினர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் சாறா காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் கழித்து, ஒரு பழைய செங்கல் சூளை அருகே உள்ள புதர்களில் அழுகிய நிலையில் சிதைந்த ஒரு சடலம் கிடப்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தடயவியல் குழுவை அழைத்தனர். குழுவினர் முக்கியமான ஆதாரங்களை சேகரித்து சடலத்தை மற் பாஸ்ட் மோர்டம் நிபுணர்களிடம் அனுப்பினர். அன்றே மாலை, சடலத்துடன் இருந்த ஆடைகள் மற்றும் செருப்புகளை பார்த்ததும் குடும்பத்தினர் அதை யூசுப்பின் உடல் என்பதை உறுதி செய்தனர்.
போஸ்ட் மோர்டம் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. யூசுப்பின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, வயிற்றில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பின்னர் முகம் மற்றும் உடலின் பல பகுதிகளில் அமிலம் ஊற்றப்பட்டு, அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளார். இது குடும்பத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யூசுப்பின் தந்தை பூரே கான் மற்றும் உறவினரான முபீன் சயீஃபி ஆகியோர் போலீசாருக்கு அளித்த தகவலின்படி, தபாஸ்ஸும் காதலர் தானிஷுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.
தானிஷ், யூசுப்புக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்வதாக நட்பாக பழகி, தொடர்ந்து வீட்டுக்கு வரத் தொடங்கியதுதான் இவர்களுக்கிடையே தவறான உறவு உருவாக காரணமாக இருந்தது என கூறப்படுகிறது. தபாஸ்ஸும் மற்றும் தானிஷ் ஆகியோர் தற்போது மாயமாகியுள்ளனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
தபாஸ்ஸும் மற்றும் தானிஷ் ஆகியோருக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது, “போஸ்ட் மோர்டம் அறிக்கையும், குடும்பத்தினரின் வாக்குமூலங்களும் பார்த்தபோது இது திட்டமிட்டு செய்த கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது பல சந்தேகத்திற்கிடமான இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்” எனக் கூறினார்.
