“சன்மானமா ரூ.35 கோடி தர்றோம், சபாநாயகருக்கு எதிரா ஓட்டு போடுங்க…” என்று ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ஐபிடிஎஸ் (IPTDS) அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு பேரம் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகவும், அதற்கு ஆதரவாகச் செயல்படக் கோரியும் இந்த டீல் பேசப்பட்டுள்ளது. தன்னிடம் ஆசை வார்த்தை கூறி பேரம் பேசியது மட்டுமில்லாமல், இந்த விஷயத்தை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என திருநாவுக்கரசு தன்னை மிரட்டியதாகவும் எம்.எல்.ஏ இளையராஜா காவல் துறையில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார்.

​இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, ஐபிடிஎஸ் அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியாகச் செயல்பட்ட நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தவெக எம்.எல்.ஏ-வை கோடிகளைக் கொட்டி விலைக்கு வாங்க முயன்றதும், கொலை மிரட்டல் விடுத்ததும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கை, தற்போதைய தவெக ஆட்சியைக் கவிழ்க்க திரைமறைவில் நடக்கும் பெரும் சதியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.