சஞ்சு சாம்சனை புறக்கணித்ததால் கோபமடைந்த சசி தரூர், தேர்வாளர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினார்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு கேரளாவின் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.  சஞ்சு சாம்சனை புறக்கணித்த தேர்வாளர்களுக்கு தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி நாளை முதல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது, அதற்கான அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. ஆனால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் கேப்டனாகவும் இருந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார். ஏனெனில் கேரளா மற்றும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்த அனுபவம் சாம்சனுக்கு உள்ளது. இது தவிர, யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டதற்கு சசி தரூர் ஆச்சரியம் தெரிவித்தார். 

சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில், இது உண்மையிலேயே விவரிக்க முடியாதது. சஞ்சு சாம்சன் வெறும் வீரராக  தேர்ந்தெடுக்கப்படுவதையும் தாண்டி, எல்லா சீனியர்களும் இல்லாத நேரத்தில் அவர் அணியை கேப்டனாக வழிநடத்தியிருக்க வேண்டும். கேரளாவுடனான அவரது கேப்டன் அனுபவம் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான அனுபவம் சூர்யகுமார் யாதவை விட தற்போது சிறந்தது. கிரிக்கெட்டை விரும்பும் பொதுமக்களுக்கு  தேர்வாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். சாஹலும் ஏன் இல்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்..

லெக் ஸ்பின்னர் சாஹல் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் (96 விக்கெட்). 33 வயதான சாஹல் இந்த ஆண்டு 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2023 உலகக் கோப்பை அணியில் சாஹல் மற்றும் சாம்சன் இருவரும் இடம் பெறவில்லை.

சூர்யகுமார் யாதவ் மோசமான நிலையிலும் ஒருநாள் போட்டியில் இடம் பெற்றார். சூர்யா 2023 உலகக் கோப்பையில் 17.66 சராசரியில் 7 இன்னிங்ஸ்களில் 106 ரன்கள் எடுத்தார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படத் தவறினார். அவர் மெதுவாக விளையாடி 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இதனால் அவர் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளானார்..

அயர்லாந்துக்கு எதிரான டி20 சர்வதேச தொடரில் சாம்சன் 2 போட்டிகளில் 41 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 டி20 சர்வதேசப் போட்டிகளில், சாம்சன் 3 இன்னிங்ஸ்களில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சர்வதேச தொடருக்கான இந்திய அணி :

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.