திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த 20 வருடங்களாக துபாயில் ஒரு சுற்றுலா டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார். இதன் காரணமாக அவருடைய மனைவி குழந்தைகளுடன் தஞ்சாவூரில் உள்ள புளியந்தோப்பு என்ற பகுதியில் இருந்த நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு சிகாமணி வந்ததாக பிரியாவுக்கு செய்தி கிடைத்தது.

இதனால் அவர் தன்னுடைய கணவனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நிலையில் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இதன் காரணமாக பிரியா கடந்த 28ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 25ஆம் தேதி ஒரு காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டறியப்பட்டதாகவும் அடையாளம் தெரியாததால் போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்து விட்டதாகவும் தெரியவந்தது.

இதன் காரணமாக இறந்தது சிகாமணியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதற்கிடையில் கடந்த 30 ஆம் தேதி சிகாமணியை கொலை செய்ததாக கூறி தியாகராஜன் (58) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது பல தகவல்கள் தெரிய வந்தது. அதாவது துபாயில் சிகாமணி நடத்தி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாரதா (32) என்ற பெண் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பின்னர் சாரதா சிகாமணிக்கு தொழிலுக்கு பணம் கொடுத்தார். இது தொடர்பாக சிகாமணியின் மனைவிக்கு தெரிய வரவே அவர் சாரதாவை செல்போனில் அழைத்து கண்டித்துள்ளார். இநநிலையில் சாரதா திடீரென சிகாமணியிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சாரதாவை சிகாமணி அடித்துவிட்டார். பின்னர் சாரதா என்னுடைய தாய்க்கு நடந்த விஷயங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிலையில் அவர் தியாகராஜன் மற்றும் மற்றொருவரை ஏற்பாடு செய்து துபாயிலிருந்து சிகாமணியை வரவழைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

அதாவது சம்பவ நாளில் சாரதா, தியாகராஜன் மற்றும் மற்றொருவர் மது குடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சிகாமணிக்கும் அது ஊற்றி கொடுத்துள்ளனர். இந்த மது மற்றும் அவர் சாப்பிட்ட கோழி கறியில் கிட்டத்தட்ட 30 தூக்க மாத்திரைகளை கலந்துள்ளனர். இதை சாப்பிட்ட சில நிமிடங்களில் அவர் மயங்கி விடவே பின்னர் சாரதா நெஞ்சில் ஏறி அவரை மிதித்தார். இதில் அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் தான் உடலை கொண்டு ஒரு காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து போலீசார் சாரதா, அவருடைய தாயார் கோமதி, சகோதரி நிலா உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தியாகராஜன் சரண் அடைந்ததால் மற்றவர்களை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.