
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதான சுஷிலா தேவி என்கிற வயதான பெண் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், சுஷிலா தேவியின் இளைய மருமகள் பூஜா, அவளது சகோதரி கமலா மற்றும் கமலாவின் காதலர் அனில் வெர்மா ஆகியோர் இந்த கொலைக்குப் பின்னால் உள்ளனர் என போலீசார் உறுதி செய்தனர். அதாவது, சுஷிலாவை கொன்று, வீட்டு நகைகள் மற்றும் பொருட்கள் ரூ.8 லட்சம் மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
பூஜாவின் கணவர் இறந்த பின்னர், அவள் தனது மைத்துனருடன் உறவு வைத்திருந்ததாகவும், அவரால் ஒரு குழந்தை பெற்றிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உறவிற்கு எதிராக மைத்துனரின் மனைவி வீட்டை விட்டு சென்ற நிலையில், பூஜா குடும்ப நிலத்தை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதற்கு மாமியார் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்துள்ளனர்.
அனில் வெர்மா, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்ய முயன்றபோது போலீசாரால் பிடிக்க முயற்சிக்கபட்டார். ஆனால் அவர் துப்பாக்கியால் சுட முயன்றதால் போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த அனில் தற்போது ஜான்சி மருத்துவக் கல்லூரியில் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது பூஜா, கமலா இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சுஷிலா தேவியின் கொலைக்கு பின்னாலுள்ள சிக்கலான குடும்ப உறவுகள், சொத்து சிக்கல்கள் மற்றும் திட்டமிட்ட கொலை என அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை விரிவாக்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.