புனே மாவட்டம், ராஜகுருநகரில் உள்ள தனியார் பயிற்சி நிலையம் (கோச்சிங் சென்டர்) ஒன்றில், திங்கட்கிழமை காலை நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட மாணவன் திடீரென தனது நண்பரான புஷ்கராஜ் திலீப் ஷிங்காடே என்பவரிடம் சென்று, கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் பலமாகத் தாக்கினான். இந்தத் தாக்குதல் எதிர்பாராதவிதமாக நடந்ததால், மற்ற மாணவர்களும் ஆசிரியரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

படுகாயமடைந்த புஷ்கராஜை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவத்தை அரங்கேற்றிய மாணவன் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டான்.

இரு மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் காவல்துறை மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் குழு அல்லது கும்பல் சண்டையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சி நிலையத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளதோடு, இந்தச் சம்பவம் அந்த  வட்டாரத்தில் பெரும் பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.