
சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகரில் முகமது நவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நாசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆறு வயதில் குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தஞ்சாவூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி நவாசின் வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளியன்று குளியல் அறையில் குளிக்க சென்ற சிறுமி வெளியே வரவில்லை.
இதனால் நவாசும் அவரது மனைவியும் குளியல் அறை கதவை தட்டி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமி சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அச்சத்தில் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதனை அடுத்து நவாஸ் ஒரு வழக்கறிஞர் மூலம் சிறுமியின் மரணம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து தீக்காயங்கள் இருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நவாஸ், நாசியா, அவர்களது நண்பர் லோகேஷ் ஆகியோர் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் மயங்கி விழுந்த சிறுமியை குளியலறைக்குள் இழுத்து சென்றனர். பின்னர் இருவரும் ஊதுபத்தியை கொளுத்தி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான லோகேஷை தேடி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.