
விருதுநகர் மாவட்டம் நாகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வழக்கம் போல ஆடுகள் வாங்க வெளியூருக்கு சென்று இருப்பார் என குடும்பத்தினர் நினைத்தனர்.
ஆனால் மூன்று நாட்களாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது முஷ்டக்குறிச்சியைச் சேர்ந்த காசி என்பவரது தோட்டத்தில் சாக்கு மூட்டை மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சாக்கு முட்டையை வெளியே எடுத்தனர்.
அதனை திறந்து பார்த்தபோது மர்ம நபர்கள் முருகனை அடித்துக் கொலை செய்து கை, கால்களை கட்டி, சாக்கு பையில் அடைத்து கிணற்றில் தூக்கி வீசியது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.