6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் அதிகரிக்கும் போது திடீரெனக் கை, கால்கள் சுண்டி இழுக்க, கண்கள் மேல்நோக்கிச் சென்று வலிப்பு ஏற்படுவது இயற்கை. இதனை மருத்துவத்தில் ‘காய்ச்சல் வலிப்பு’ என்பார்கள். இது பெரும்பாலும் தற்காலிகமானது என்பதால், இந்நேரத்தில் பெற்றோர் பயப்படாமல் பதற்றத்தைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
காய்ச்சல் வலிப்பு ஏற்படும் போது பெற்றோர் சரியான முதலுதவிகளைத் தெரிந்து வைத்திருப்பது குழந்தையின் பாதுகாப்பிற்கு முக்கியம். குழந்தையைப் பாதுகாப்பான தரையில் ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்க வைக்க வேண்டும். வலிப்புத் தொடங்கிய நேரத்தைக் குறித்துக்கொள்வதுடன், சுற்றியுள்ள ஆபத்தான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
அதேவேளையில், வலிப்பு வரும்போது செய்யக்கூடாத சில ஆபத்தான தவறுகளையும் தவிர்க்க வேண்டும். குழந்தையின் வாயில் கரண்டி, துணி, விரல் போன்ற எந்தப் பொருளையும் திணிக்கக் கூடாது. நாக்கைக் கடித்துவிடுவார்கள் என்ற அச்சம் தேவையில்லை. அதேபோல, சுயநினைவின்றி இருக்கும் குழந்தையின் கை, கால்களை இறுக்கமாகப் பிடித்து வலிப்பை நிறுத்த முயற்சிக்கக் கூடாது.
வலிப்பு 5 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தாலோ, குழந்தைக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது வலிப்பு நின்று நீண்ட நேரமாகியும் சுயநினைவுக்குத் திரும்பவில்லை என்றாலோ தாமதிக்காமல் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு 6 வயதுக்கு மேல் இந்தக் காய்ச்சல் வலிப்பு வருவதில்லை. இது குழந்தையின் அறிவுத்திறனையோ அல்லது மூளை வளர்ச்சியையோ எந்த வகையிலும் பாதிக்காது. எனவே, காய்ச்சல் வலிப்பு நேரத்தில் பதற்றமடையாமல் சரியான முதலுதவி செய்து குழந்தையைப் பாதுகாப்பதே சிறந்த வழடியாகும்.
