நாடு முழுவதும் தற்போது எல்பிஜி சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாகப் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் கேஸ் சிலிண்டருக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்; சில இடங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் கேஸ் சிலிண்டருக்கு மாற்றாகப் பகிரப்பட்டு வரும் ஒரு வித்தியாசமான அடுப்பு வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பழைய காலத்து மண் அடுப்புகளைத் தற்போதைய காலத்திற்கு ஏற்ப அப்கிரேடு செய்து, இரும்பால் செய்யப்பட்ட இந்த அடுப்பு பார்ப்பவர்களைத் திகைக்க வைத்துள்ளது.

​எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், எல்-ஷேப் (L-Shape) வடிவில் ஒரு வினோதமான இரும்பு அடுப்பு காட்டப்படுகிறது. இதில் மின்சாரத் தேவையோ அல்லது புகையினால் ஏற்படும் எரிச்சலோ இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஒரு குழாய் வழியாகக் குச்சிகளைச் சொருகினால், மற்றொரு குழாய் வழியாக நெருப்பு சீறிப்பாய்கிறது; காற்றோட்டத்திற்காகத் தனியாக ஒரு குழாயும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. “இது வெறும் அடுப்பல்ல, ஒரு இன்ஜினியரிங் அற்புதம்” எனப் பலரும் இதைப் பாராட்டி வருகின்றனர். சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மக்கள் காட்டும் இத்தகைய புத்திசாலித்தனமான ஐடியாக்கள் இப்போது இணையத்தின் ஹாட் டாப்பிக்!