
கேரளா மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 250 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் 225 இராணுவ வீரர்கள் இறங்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 19 பேர் பலியாகியுள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. 71பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் 500 குடும்பங்கள் வரை சிக்கியுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.200000, காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50000 நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் தமிழக அரசு உதவ தயாராக உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.