“முல்லைப்பெரியாறு புதிய அணையைத் தமிழக எல்லையிலேயே அமைத்துக் கொள்ளலாம்; அதற்கான முழு நிதியையும் கேரள அரசே ஏற்றுக்கொண்டு வழங்கும்!” – தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கேரள முதல்வர் சதீசன் பேசியுள்ள இந்த அதிரடிப் பேச்சு, தென்னக அரசியலிலும் இரண்டு மாநிலங்களிடையேயும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கேரள முதல்வர் சதீசன், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினைக குறித்துப் புதிய முன்மொழிவு ஒன்றை அதிரடியாக முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், “புதிய அணையைத் தமிழக எல்லைக்குள்ளேயே கட்டிக்கொள்வதற்குப் பரிசீலிக்கலாம். புதிய அணைக்கான இடத்தேர்வு, அதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் தமிழக அரசே நேரடியாக மேற்கொண்டு முழுமையாகக் கண்காணிக்கலாம். இதற்கான மொத்த நிதியையும் கேரள அரசே ஏற்கும்” எனப் பேசினார்.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டம் குறித்துத் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே பல ஆண்டுகளாகத் தொடர் சர்ச்சைகளும் வழக்குகளும் நிலவி வரும் சூழலில், கேரள முதலமைச்சர் சதீசன் தென்மாநில மாநாட்டிலேயே நேரடியாக முன்வைத்துள்ள இந்த அதிரடி முன்மொழிவு, இரு மாநில எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
