மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாகத் தொடங்கிய பிறந்தநாள் விழா, எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய துயர நிகழ்வாக மாறிய சம்பவம் நல்லசோப்ராவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மிகுந்த ஆசையோடு வாங்கி வரப்பட்ட கேக்கை வெட்டி, அதை அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

ஆனால், அந்த கேக்கை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது. மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இயங்கிக் கொண்டிருந்த பிறந்தநாள் வீடே, சில நிமிடங்களில் அலறல் சத்தங்களாலும் வேதனையாலும் முடங்கிப்போன காட்சி காண்போரின் நெஞ்சை நடுங்க வைத்துள்ளது.

இந்த விபரீதத்திற்கு என்ன காரணம் என்று அதிர்ச்சியடைந்து கேக்கை ஆய்வு செய்தபோதுதான் அந்த திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெட்டப்பட்ட அந்த பிறந்தநாள் கேக்கிற்குள் இறந்துபோன பள்ளி ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மை வாய்ந்த அந்தப் பள்ளி கேக்கில் கலந்ததால், அதைச் சாப்பிட்ட குழந்தைகள் உட்பட மொத்தம் 11 பேருக்குக் கடுமையான நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொண்டாட்டமாக இருக்க வேண்டிய நாள், நொடிப் பொழுதில் உயிரைப் பறிக்கும் அபாயகட்டத்திற்குச் சென்றது அப்பகுதி மக்களைச் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

உணவுப் பொருட்களின் சுகாதாரத்திலும், குறிப்பாகக் குழந்தைகளுக்காக வாங்கி வரப்படும் பலகாரங்களின் தரத்திலும் கடைக்காரர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே அப்பட்டமான சான்றாகும். கேக் தயாரித்த மற்றும் விற்பனை செய்த கடை மீது காவல்துறையினரும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரைக் குடிக்கும் வகையில் இத்தகைய அலட்சியப்போக்குடன் செயல்பட்ட கடை நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொண்டாட்ட உணவுகள் கூட விஷமாக மாறக்கூடும் என்பதால், பொதுமக்கள் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.