தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், “எத்தனை பேர் கூட்டமாகச் சேர்ந்து நம்மை எதிர்க்க வந்தாலும், எதற்கும் அஞ்சாமல் தனியாக வரும் நம்மைத் தேர்ந்தெடுக்கத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்று மிகுந்த தன்னம்பிக்கையோடு பேசினார். மேலும், தேர்தல் ஆணையம் தவெக-விற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியிருப்பதை உற்சாகத்துடன் குறிப்பிட்ட அவர், இந்தச் சின்னத்தைச் சாதாரண எளிய மக்களின் அடையாளமாக மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் விசில் சின்னத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
விஜய்யின் இந்தத் “தனித்துப் போட்டி” என்ற மறைமுக அறிவிப்பு, கூட்டணிக் கணக்குகளை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. முக்கியமான அரசியல் மாற்றத்தை நோக்கிய இந்தப் பயணத்தில், தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘விசில் போடு’ என்ற அவரது சினிமா அடையாளமே இப்போது அரசியல் அடையாளமாக மாறியிருப்பது, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே ஒரு பெரிய அலையை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “நாம் யாருக்கும் அடிபணியத் தேவையில்லை, மக்களே நமது பலம்” என்ற விஜய்யின் ஆவேசமான பேச்சு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் ஒரு மும்முனைப் போட்டியாக, இன்னும் சொல்லப்போனால் ஒரு ‘மாஸ்’ அரசியல் யுத்தமாக மாறப்போவதை உறுதி செய்துள்ளது.
