
கர்நாடக மாநில மலாபத் கிராமத்தில் காமண்ணா கொணகண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேணுகா (27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு சாலையில் ரேணுகா தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கியதால் விபத்தில் ரேணுகா உயிரிழந்து விட்டதாக அவரது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய நிலையில் விபத்து நடந்ததற்கான ஆதாரம் இல்லாததால் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரித்த நிலையில் அவர்கள் ரேணுகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அதாவது ரேணுகாவுக்கு குழந்தை இல்லாததால் அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருப்பாதாக சந்தோஷிடம் அவரது பெற்றோர்கள் கூறிய நிலையில் மூவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி வீட்டை விட்டு ரேணுகாவை மூவரும் அழைத்து சென்று தலையில் கல்லை போட்டு சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
அதன் பிறகு விபத்தில் இறந்ததாக அவர்கள் நாடகமாடியுள்ளனர். இது விசாரணையில் தெரிய வந்த நிலையில் போலீஸார் மூவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.