கேரள மாநிலம் எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஷாஜூ என்பவருடைய மகன் ஆண்டோ வர்கீஸ். இவருடைய மனைவி ஜிஸ்மால். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக பல இடங்களிலும் கடன் வாங்கியுள்ளனர். இதனால் அந்த தம்பதி கடன் தொல்லையில் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.

அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். குழந்தை இல்லாததாலும் கடன் தொல்லையாளும் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஆண்டோ வர்கீஸ் எலி மருந்தை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக தனது உடலில் செலுத்திக் கொண்டு மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அவருடைய மனைவி உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனக்கு உறுதுணையாக இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையில் அவரும் தான் தங்கி இருந்து அறைக்கு திரும்பிச் சென்று அதே ஊசியை எடுத்து தன்னுடைய உடலில் செலுத்திக் கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.