அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள் எனவும் அப்படி அழைத்தால் அதற்கு அர்த்தமே வேறு எனவும் முதல்வர் ஸ்டாலினை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த நிலையில் இதற்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சிவி சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்து விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகத்தின் அநாகரீக பேச்சிற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வயதில் மூத்தவர்களை “அப்பா” என அழைப்பது, தமிழ்நாட்டில் காலங்காலமாக இருக்கும் வழக்கத்தில் ஒன்றுதான். ஆனால், குழந்தை செல்வங்கள் “அப்பா” என்று அழைத்ததை, வன்மத்துடன் கொச்சைப்படுத்தி பேசியது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. பொதுவெளியில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவருக்கு எதிராக அவதூறாக பேசுவது என்பது அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.

கடந்த 2024, செப்டம்பர் அன்று, இதேபோன்று மதியிழந்து முதல்வர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, இதுபோன்ற மோசமான பேச்சை சி.வி.சண்முகம் பேசியுள்ளார். அவரது பேச்சை நாங்களும் பார்த்தோம். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது?. குறிப்பாக எதிர்காலத்தில் இதுபோன்று பேசமாட்டேன் என்று பிரமாணப் பத்திரமாக எழுதித்தர வேண்டும்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றமாகும்’ என்றார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் முகத்தில் அறைந்தால் போன்று கூறியபின்பும் இதுபோன்று பேசுவது சுயவிளம்பரம் அடைவதற்குதானே தவிர வேறென்றும் இருக்கமுடியாது.

ஒன்றிய அரசும், ஆளுநரும் கொடுக்கும் இடைஞ்சலுக்கு மத்தியிலும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு நாள்தோறும் சிந்தித்து பல்வேறு செயல்திட்டங்களை தீட்டி, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று, முதல்வர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவரைப் பற்றி நிதானம் இல்லாமல் அவதூறாக பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.