உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பூர்வாமீர் கிராமத்தில், வீட்டின் முற்றம் திடீரென உள்வாங்கி 20 அடி ஆழத்திற்குப் பெரிய குழி உருவானதால், அதில் 18 வயது இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 6:40 மணியளவில், குளியலறையிலிருந்து வெளியேறித் தனது அறைக்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பெண், வீட்டின் முற்றத்தைக் கடக்கும் போது எதிர்பாராதவிதமாகத் தரை உள்வாங்கியதால், இடிபாடுகளுடன் சேர்ந்து 20 அடி ஆழக் குழிக்குள் சிக்கிக்கொண்டார்.
குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் உடனடியாகக் காவல் துறை, தீயணைப்புத் துறை, NDRF மற்றும் SDRF மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமார் 60 மீட்புப் படை வீரர்கள், பலவீனமான மண் அமைப்பிற்கு இடையே மிகவும் கவனமாகச் செயல்பட்டு JCB எந்திரங்களின் உதவியுடன் மண்ணை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே அந்தப் பெண்ணை மீட்க முடிந்தது.
कानपुर : घर का आंगन अचानक धंसने से 25 फीट गहरा गड्डा हुआ
◆ गड्ढे में गिरी 18 साल की युवती, 7 घंटे के ऑपरेशन के बाद उसे बाहर निकाला गया
◆ लेकिन अस्पताल में उसे डॉक्टरों ने मृत घोषित कर दिया
◆ 3 साल पहले घर में बोरिंग कराया था, लेकिन पानी नहीं निकलने पर ऊपर से प्लास्टर कराकर… pic.twitter.com/UAVp7TSNar
— News24 (@news24tvchannel) August 29, 2026
உடனடியாகச் சர்சௌல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டில் அமைக்கப்பட்ட போர்வெல் முறையாக மூடப்படாததாலும், சமீபத்திய மழையால் நிலத்தடியில் ஈரப்பதம் அதிகரித்துத் தரை பலவீனமடைந்ததாலுமே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் முறையாக மூடப்படாமல் விடப்படும் பழைய போர்வெல்கள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் பெரும் கேள்விகளையும் எச்சரிக்கையையும் எழுப்பியுள்ளது.
