
குமரியில் முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நாட்டுக்கு செய்த நற்பணிகளை போற்றும் விதமாக அவருக்கு கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்திற்கு சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.
இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெறுக செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர் வாசிகள் இதனால் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்து சொல்லும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும். இந்த சிலையை அமைக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும் கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையிலையும் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பிறகு இதனை கட்ட வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.