பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த தற்போதைய காலகட்டத்திலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சக்திவேலின் செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 69-வது வார்டு, பாரதி பார்க் 4-வது வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்களது வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றும் போது எதிர்பாராத விதமாக 3 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் குப்பையோடு வீசியுள்ளனர்.
அந்தப் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் சக்திவேல், குப்பைகளை ஆய்வு செய்தபோது அதற்குள் புதைந்து கிடந்த தங்கச் சங்கிலியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும், அந்த நகையைத் தன்வசமே வைத்துக் கொள்ள பேராசைப்படாமல், சற்றும் யோசிக்காமல் உடனடியாக நகையின் அசல் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னிலையிலேயே பத்திரமாக ஒப்படைத்து மாஸ் காட்டியுள்ளார்.
தூய்மைப் பணியாளரின் இந்த உன்னத நேர்மையைக் கண்டு நெகிழ்ந்து போன உரிமையாளர்கள் அவருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த விபரம் அறிந்து நெகிழ்ந்துபோன கோவை மாநகராட்சி ஆணையாளர், நேர்மையின் சிகரமாக விளங்கிய பணியாளர் சக்திவேலுக்கு அதிகாரிகள் மூலம் பொன்னாடை அணிவித்துத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்குத் தனி நற்பெயரைத் தேடித் தந்துள்ள சக்திவேலின் இந்த மனிதநேயச் செயல் சோசியல் மீடியாவில் வைரலாகி பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
