கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த  சில நாட்களாகவே தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தில் இருந்து நிம்மதி பெருமூச்சு விட வைத்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.