இந்தியாவில் மது போதையினால் கார் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் என்பது சமீப காலமாக ‌ அதிகரித்து வருகிறது. குறிப்பாக முக்கிய புள்ளிகளின் மகன்கள் சொகுசு காரை மது குடித்துவிட்டு அதிவேகமாக ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன்படி மும்பையில் சமீபத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு மும்பையில் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியின் மகன் ஒருவர் சொகுசு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவங்களின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது மும்பையில் 19 மற்றும் 20 வயதுடைய 5 வாலிபர்கள் சொகுசு காரினை ஓட்டி சென்றனர். அப்போது வாலிபர்கள் அனைவரும் மது போதையில் இருந்தனர். இவர்கள் காருக்குள் இருக்கும்போது ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது திடீரென சாலையோரம் இருந்த வேலி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஜூலை 11ஆம் தேதி அதிகாலை 2.38 மணி அளவில் நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.