திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சியில், குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி தலைவர் கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கண்ணநல்லூர் ஊராட்சி தலைவராகப் பணியாற்றி வந்த மகாராஜன் என்பவரே இந்தச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவருக்கும், ஊராட்சி தலைவர் மகாராஜனுக்கும் இடையே குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக திடீரென காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நாளடைவில் முற்றிப்போய் ஆத்திரமடைந்த இசக்கி பாண்டியன், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து மகாராஜனின் தலையில் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த மகாராஜனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பியோடிய இசக்கி பாண்டியனை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி, அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
