கோவையில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இதே கடையில் கோவையைச் சேர்ந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளி இளம்பெண்ணும், அவரது தாயாரும் வேலை செய்து வருகின்றனர். சக ஊழியர்கள் என்ற அடிப்படையில் மகேஷுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் அறிமுகம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணுக்கு விடுமுறை என்பதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் தனது தாயாருக்கு உணவு கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அங்கு வந்த மகேஷ், தான் அந்தப் பகுதியில் வேலை விஷயமாக வந்ததாகவும், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதனை நம்பி அந்த இளம்பெண் வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, பின் தொடர்ந்த மகேஷ் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்து பலாத்காரம் செய்துள்ளார். இதிலிருந்து தப்பிக்க அந்த இளம்பெண் போராடியும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீடு திரும்பிய தாயாரிடம் பாதிக்கப்பட்ட இளம்பெண் அழுதுகொண்டே நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,  கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த மகேஷைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.