குஜராத் மாநிலம் சூரத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பி.காம் பயின்று வந்த ரோஷ்னி (18) மற்றும் ஜோஸ்னா (20) ஆகிய இருவரும் பள்ளிப் பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.
நேற்று முன் தினம் கல்லூரிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சானியா கிராமத்தில் உள்ள சுவாமி நாராயண் கோவிலின் அருகே மாணவிகளின் மொபட் கண்டெடுக்கப்பட்டது.
அந்த கோவிலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாணவிகள் இருவரும் குளியலறைக்குச் சென்றது பதிவாகியிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், இருவரும் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து மூன்று மயக்க மருந்து குப்பிகள் மற்றும் சிரிஞ்சுகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக, உயிரிழந்த மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் ஏ.ஐ. சாட் மற்றும் ஜிபிடி (AI Chat/GPT) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ‘மயக்க ஊசி மூலம் எப்படி உயிரை மாய்த்துக் கொள்வது?’ என்பது குறித்த விவரங்களைச் சேகரித்தது தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டமிட்ட தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் இத்தகைய விபரீத முடிவுகளை எடுப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
