உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், ஹோலி பண்டிகையைக் கொண்டாட ஒன்றாகக் கூடி இருந்த குடும்பத்தில் நடந்த கோரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமில் வேலை பார்த்து வந்த 25 வயதான ஹர்திக் என்ற வாலிபர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணுடனான காதல் முறிந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். தனது காதல் தோல்விக்குத் தாயும், இரட்டைச் சகோதரி ஹிம்ஷிகாவும் தான் காரணம் என்று கருதிய அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சகோதரியை கத்தியால் 40 முறைக்கும் மேலாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
சகோதரியைக் கொன்ற பிறகு, தாயின் அலுவலகத்திற்குச் சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்த ஹர்திக், ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளைப் பார்த்து அலறிய தாயையும் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் உயிருக்குப் போராடி வரும் நிலையில், போலீஸார் ஹர்திக்கைக் கைது செய்துள்ளனர். ஒரு இன்ஸ்டாகிராம் காதல் தோல்வி, ஒரு குடும்பத்தையே சிதைத்து, சகோதரியின் உயிரைப் பறித்திருக்கும் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
