மகாராஷ்டிர மாநிலம் மும்பை போரிவலி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமியை தீவிரமாகத் தேடத் தொடங்கினர். செல்போன் தகவல்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி முதலில் ஆட்டோ மூலம் போரிவலி ரயில் நிலையத்துக்குச் சென்றதும், அங்கிருந்து கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலில் ஏறி மதுராவுக்குச் சென்றதும் தெரியவந்தது.

மதுராவுக்குச் சென்ற சிறுமி, அங்குள்ள கிருஷ்ணர் மற்றும் ராதை தொடர்பான கோயில்களுக்குச் சென்று வந்துள்ளார். இதற்கிடையில் மும்பை போலீஸார் மதுரா, பிருந்தாவனம், நிதிவனம், பர்சானா, ஆற்றங்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கோயில்கள், ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. உள்ளூர் மக்கள், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களிடமும் சிறுமி குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் மூன்று நாட்களாகியும் சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்காததால் போலீஸ் குழுவினர் பெரும் சோர்வடைந்தனர்.

இந்நிலையில், தேடுதல் பணியின்போது போலீஸ் அதிகாரி பி.எஸ்.ஐ. சுரேந்திர லோகண்டே பர்சானாவில் உள்ள ராதாராணி கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணரின் சிலை முன்பு நின்று, “சிறுமியை எப்படியாவது கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று மனமுருகி வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் கண்களைத் திறந்து பார்த்தபோது, தேடிக்கொண்டிருந்த அந்த 13 வயது சிறுமி அவருக்கு அருகிலேயே நின்றிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அதிகாரியால் அதை நம்பவே முடியவில்லை. பின்னர் தனது செல்போனில் இருந்த சிறுமியின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, பெயரை அழைத்து அடையாளத்தை உறுதி செய்துள்ளார்.

சிறுமியை பாதுகாப்பாக மீட்ட போலீஸார், அவரை நம்பிக்கையுடன் அழைத்துப் பேசி மும்பை போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமி பாதுகாப்பாக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூன்று நாட்களாக மகளை காணாமல் தவித்த குடும்பத்தினர், அவர் பத்திரமாக கிடைத்த தகவலைக் கேட்டு நிம்மதி அடைந்தனர். ஒரு பக்கம் போலீஸாரின் தீவிர தேடுதல் பணி, மறுபக்கம் கோயிலில் அதிகாரி செய்த பிரார்த்தனை என எதிர்பாராத விதமாக இந்த சிறுமியின் தேடுதல் முடிவுக்கு வந்த சம்பவம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.