
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்த சிறுவன் உடல்நலம் சரியில்லாததால் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் மாலை நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக சென்றுள்ளான். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர் சிறுவனை பல இடங்களில் தேடிய நிலையில் பின்னர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த நிலையில் சிலர் சிறுவனை காரில் கடத்தி சென்றது தெரியவந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு சாலை பள்ளத்தில் சிறுவன் பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மாதேவன் (21), மாதேவா (21) ஆகியோரை கைது செய்த நிலையில் இவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது இதில் மாதேவன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் தன் காதலியுடன் ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை அந்த சிறுவன் நேரில் பார்த்த நிலையில் வெளியில் சொல்லி விடுவான் என்ற பயத்தில் மாதேவன் தன்னுடைய நண்பன் மாதேவா உதவியுடன் சிறுவனை நைசாக பேசி அழைத்துச் சென்று வாயில் பீர் ஊற்றி மயங்க வைத்துள்ளனர். அதன் பிறகு திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் இருந்து சிறுவனை உருட்டிவிட்டு கொடூரமான முறையில் கொலை செய்தது தெரிய வந்தது.
இவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாலிபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காதலனுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவியையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 50 அடி பள்ளத்திலிருந்து சிறுவனை உருட்டிவிட்டு கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது