சென்னையில் துப்புரவு தொழிலாளியாகப் பணிபுரியும் பத்மா, தான் கண்டெடுத்த 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்து ‘தங்க மங்கை’யாக ஜொலிக்கிறார். இவரின் இந்த அசாத்திய நேர்மையைப் பாராட்டும் விதமாக, நடிகர் பார்த்திபன் பத்மாவை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்து, மேடையிலேயே அவருக்குச் செருப்பு அணிவித்து, பாதங்களைத் தொட்டு வணங்கி, உலக அழகி கிரீடமும் சூட்டி கௌரவித்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டிய அந்தத் தாய்க்குப் பார்த்திபன் செய்த இந்த நெகிழ்ச்சியான செயல் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
இருப்பினும், பத்மா தனது துப்புரவுப் பணி சீருடையிலேயே மேடைக்கு வந்ததைச் சிலர் விமர்சிக்க, அதற்குப் பார்த்திபன் தரமான பதிலடி கொடுத்துள்ளார். “பத்மா அம்மா ஆசைப்பட்டுதான் சீருடையில் வந்தார்கள், அந்த உடையைத் தனது அடையாளமாகவும் மரியாதையாகவும் அவர் கருதுகிறார்” என்று பார்த்திபன் விளக்கமளித்ததை ரஜினி ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். ஒரு நேர்மையான உழைப்பாளிக்கு அவர் செய்யும் தொழிலே அடையாளம் என்பதை உறுதிப்படுத்திய இந்தச் சம்பவம், மனிதநேயத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
