
இந்தியன் ரயில்வே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பயணிகள் ரயில்களின் டிக்கெட் விலையில் சிறிய அளவில் உயர்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டிக்கெட் விலை ஜூலை 1, 2025 இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எந்த வகை ரயில்களுக்கு விலை உயர்வு?
இந்த விலை உயர்வு பொது பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத பெட்டிகள்: 1 கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்வு ஏசி வகுப்பு டிக்கெட்டுகள்: 1 கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு. 500 கிமீக்கும் மேல் பயணிக்கும் ரயில்கள்: 1 கிமீக்கு அரை பைசா வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
இதற்கிடையே, புறநகர் ரயில்கள் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் எந்தவிதமான விலை உயர்வும் இல்லை என்பதும் பயணிகள் கவனிக்க வேண்டிய அம்சமாகும். மாத சீசன் டிக்கெட்டுகளில் மாற்றமில்லை. பல்வேறு வேலைக்குச் சென்று வரும் பயணிகள் பயன்படுத்தும் மாத சீசன் டிக்கெட் (Monthly Season Ticket) விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இது பயணிகளுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.
IRCTC – ஆதார் இணைப்பு கட்டாயம்!
மேலும், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக, IRCTC கணக்குடன் ஆதார் அட்டை இணைத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இது போலி பயணிகள் கணக்குகள் மற்றும் ஏஜெண்ட் மோசடிகளை தவிர்க்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பயணிகள் நலனையே முக்கியமாகக் கருதி செயல்படும் இந்தியன் ரயில்வே, குறைந்த கட்டணத்தில் பயண வசதியை வழங்கி வருகிறது. இந்த விலை உயர்வு மிக குறைவாகவே செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் மீது அதிகபட்சப் பொருள் சுமை ஏற்காத வகையிலேயே திட்டமிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுருக்கமாக சொன்னால் 501 km முதல் 1500 km வரை 5 ரூபாயும், 1500 முதல் 2500 km வரை 10 ரூபாயும், 2501 முதல் 3000 கிலோமீட்டர் வரை 15 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்லீப்பர், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புகளில் கிலோமீட்டருக்கு தலா ஒரு பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிகளில், இருக்கைக்கு குளிர்சாதன பெட்டி, 1, 2, 3 வகுப்புகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புறநகர் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.