
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் பகுதியில் துஷார் சக்சேனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பத்திரிக்கையாளர். இவருக்கு நொய்டா காவல்துறையினர் ரூ.1000 அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கார் ஓட்டும்போது எதற்காக ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அவர்கள் அபராதம் விதித்துள்ளனர். பொதுவாக பைக்கில் செல்லும்போதுதான் ஹெல்மெட் அணிய வேண்டும். அதன் பிறகு காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாவிட்டால் தான் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக காரில் சென்ற போது ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக அபராதம் செலுத்த வேண்டும் என மெசேஜ் வந்துள்ளது.
ஆனால் அந்த மெசேஜ் தவறுதலாக வந்துள்ளது என்று நினைத்துள்ளார். ஆனால் அந்த மெசேஜ் தொடர்ந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்திற்கு சென்று கேட்டபோது அபராதம் செலுத்தவில்லை எனில் நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். அவர் இது தொடர்பாக கூறும்போது காரில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதேபோன்று ராஜஸ்தானில் காரில் சென்ற ஒருவருக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.