உத்தரபிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் பெண் ஒருவரின் கடையில் அடிக்கடி வந்து சென்ற காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை ஏமாற்றி 5 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடைக்கு வாடிக்கையாளராக வந்து பழகிய அந்த காவலர், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
மேலும் திருமண உறுதிமொழியை நம்பிய அந்தப் பெண்ணிடம் இருந்து கார் மற்றும் வீடு வாங்குவதாகக் கூறி சுமார் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் அந்த காவலர் அபகரித்துள்ளார். திருமணம் குறித்து அந்தப் பெண் அழுத்தம் கொடுத்தபோது, இது வெறும் ‘டைம் பாஸ்’ என்று கூறி அந்த காவலர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புகாரளித்தால் குடும்பத்தையே கொன்று விடுவேன் என்றும், பொய் வழக்குகளில் சிக்க வைப்பேன் என்றும் தனது சீருடையைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ உரையாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், தற்போது அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
