நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகன் உள்ளார். இதே போல ஒத்தக்கடை பகுதியில் சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி செல்வராஜூம் கௌதமியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனால் போலீசார் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதலர்களை விருப்பபடி வாழுமாறு சமாசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியின் தம்பி உறவு முறை உள்ள கதிர்வேல் என்பவர் பருத்திப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருக்கிறார். இவரது தலைமையில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனால் கௌதமியின் தாய் வசந்தா தனது மகளை நர்சிங் படிக்க வைத்ததால் அதற்கு ஆன செலவை தந்துவிட்டு விருப்பப்பட்டவருடன் செல் என கூறியதாக தெரிகிறது. அதற்கு செல்வராஜ் தனக்கு சொந்தமான வீட்டை எழுதி கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் கூறியபடி கிரய செட்டில்மென்ட் செய்ய வரவில்லை. செல்வராஜும் அவர்களது உறவினர்களும் அடுத்த நாள் பஞ்சாயத்திற்கும் செல்லவில்லை.

இதனால் நேற்று இரவு 10 மணிக்கு கதிர்வேல் வீட்டில் படுத்து இருந்தபோது திடீரென வேகமாக வந்த ஒருவர் இனி பஞ்சாயத்து தலைவராகவும் இருக்க முடியாது உயிரோடும் இருக்க முடியாது எனக்கூறி கதிர்வேலை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயம் அடைந்த கதிர்வேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.