ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் டூஹான் (வயது 33) என்பவர், ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவக் குழுத் தலைவராக பணியாற்றி வந்தவர். திருமணமான இவர், 2021-ஆம் ஆண்டு விடுமுறை நாட்களில் ஸ்பெயினில் ஒரு பெண்ணை சந்தித்து நெருங்கி பழகினார். பின்னர் அந்த பெண் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த பெண்  கர்ப்பமானது அவருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து கருவை கலைக்க  முயன்ற டூஹான், ‘Misoprostol’ என்ற கருக்கலைப்பு மாத்திரையை நொறுக்கி, அதை ஊசியில் நிரப்பி அந்த பெண்ணுக்கு தெரியாமல் உடலில் செலுத்தினார். தொடர்ந்து வலியால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனை சென்றபோது, தன்னிடம் கருக்கலைப்பு நடந்தது தெரியவந்தது. விசாரணையில், அதே நாளில் டூஹான் இம்மருந்து குறித்து இணையத்தில் தகவல்கள் தேடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், டூஹான் மீது தாக்குதல், பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன. இந்த குற்றங்களை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் கூடுதல் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் கடுமையான தீர்ப்பளித்தது.