சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் தொடர்ச்சியாக இறந்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த கால்நடைத்துறை, காகங்களின் இறப்பிற்கு H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றுதான் காரணம் என்பதை உறுதி செய்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆங்காங்கே இறந்து கிடக்கும் காகங்களை பொதுமக்கள் யாரும் வெறும் கையால் தொட வேண்டாம் என்றும், மீறினால் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறந்த காகங்களை அப்புறப்படுத்தும்போது அவற்றை 8 முதல் 10 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த வைரஸால் மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு நிம்மதியான விஷயமாக இருந்தாலும், பறவைகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் வைரஸ் பரவல் காரணமாக, சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை தற்போது தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது.
