சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்துள்ளார். இதன் பின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பொது இடங்களில் கழிவு நீர் கொட்டப்படுகின்ற காரணத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நீர்நிலைகள் பாதிப்பு ஏற்படுகிறது.

அதனால் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கழிவுநீர் லாரிகள் அனைத்தையும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட  லாரிகள் குறித்த விவரங்கள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட லாரிகளில் gps கருவிகள் பொருத்தப்பட்டு கழிவுநீரை கொண்டு செல்லும் லாரிகள் எந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமோ? அங்கு சரியாக கொண்டு செல்கின்றதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அதையும் மீறி நீர்நிலைகளில் கழிவு நீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு தேவையான அளவு இருக்கிறதா? அவை முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு இரண்டு குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஒரு பறக்கும் படை அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அவற்றை சிமென்ட்  தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும். இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீரை கலக்கும் தொழிற்சாலைகளில் உரிமம் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.