திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழை நீர் கழிவுநீர் கால்வாய்களில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவு நீர் அகற்றும் வாகனம் குறித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கழிவு நீர் அகற்றும் வாகனம் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல மருத்துவமனை வளாகத்தில் தேவை இன்றி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உருவாகி இருப்பது தெரியவந்தது. இதனால் மருத்துவமனைக்கு அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.