
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் செக்டார் 36 பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறை வெடித்து சிதறியதால் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் சுமார் 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் சிகிச்சையில் சிறிய முன்னேற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டின் கழிப்பறையை சுத்தம் செய்யும் போது மீத்தேன் வாயு வெளியேறி வெடிப்பு ஏற்பட்டதாக அந்த இளைஞரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த விபத்தின் தாக்கம் அந்த அறையில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எனவே, கிரேட்டர் நொய்டா ஆணைய அதிகாரிகள் இவ்விபத்தை ஐஐடி நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடித்து சிதறிய கழிப்பறை மேற்கத்திய மாடலில் அமைந்திருந்ததாகவும், அதில் காற்றோட்ட குழாய் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், வீட்டின் குழாய்வழி அமைப்பையும், கழிவுநீர் கால்வாய்களையும் பரிசோதித்ததில் எந்தவித குறைபாடுகளும் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விபத்தின் போது அந்த இளைஞரின் கைகள், கால்கள், வாய், முதுகு மற்றும் உடலின் கீழ்பகுதி உள்ளிட்ட இடங்கள் தீவிரமாக எரிந்துள்ளன. குடும்பத்தினர் கூறுகையில், கழிப்பறை ஃப்ளஷ் அழுத்தியபோது வெளியேறிய மீத்தேன் வாயு அருகிலிருந்த ஏசி கம்பிரசர் யூனிட்டுடன் தொடர்பு கொண்டு வெடித்திருக்கலாம் என்றும், தெருவில் உள்ள கழிவுநீர் மூடிகள் அடைக்கப்பட்டதால் வாயு வெளியேற முடியாமல் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.