தமிழகத்தில் திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீடு எனப் புதிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
குறிப்பாக, மதுரை கூட்டத்தில் திமுகவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதுடன், மாணிக்கம் தாகூர் போன்ற எம்பி-க்கள் சமூக வலைதளங்களில் சூசகமான கருத்துகளைப் பதிவிட்டு வருவது இரு கட்சிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காங்கிரஸ் மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது திமுகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மோதல் ஒருபுறம் இருக்க, கூட்டணி குறித்துப் பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் மேலிடம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இருப்பினும், மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் தொடர்ந்து பாரதியார் கவிதைகள் மூலம் தங்கள் நிலைப்பாட்டைத் தீவிரமாக வெளிப்படுத்தி வருவதால் சலசலப்பு நீடிக்கிறது.
இதனால், வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குக் காங்கிரஸ் கட்சி அழைக்கப்படுமா என்பதில் பெரும் கேள்விக்குறியும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
