தமிழகத்தில் பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே  தற்போது அதிகார மோதல் என்பது நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் பாமக கட்சியின் தலைவராக அன்புமணியை அறிவித்த நிலையில் அவருக்கு மாம்பழ சின்னம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது ராமதாஸ் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கிடையில் அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் ராமதாஸ் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை.

அதே நேரத்தில் அன்புமணிக்கு கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய அதிகாரம் இல்லை எனவும் ராமதாஸ் கூறி வருகிறார். இந்த நிலையில் தற்போது ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பாமக கட்சியின் தலைவராக தன்னை அங்கீகரிக்கும் வரை தேர்தல் தேதியை வெளியிடக்கூடாது என வலியுறுத்தி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தன்னை தலைவராக அங்கீகரிக்கும் வரையில் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு நாளை தலைமை நீதிபதி தலைமையில் விசாரணைக்கு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.