ஆந்திரா சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜூ(35). ஐடி நிறுவனம் ஊழியரான இவர் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற தம்பி உள்ளார். புருஷோதமனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த ரிபிஜெயா தன் மனைவியுடனான கள்ளத்தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு புருஷோதமனிடம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து ரிபிஜெயாவுக்கும் புருஷோதமனுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவிவந்துள்ளது.

இதனிடையே பெங்களூருவிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணி கிடைத்ததால் புருஷோதமன் கடந்த சனிக்கிழமை இரவு சென்றுள்ளார். இந்த நிலையில் தனது சகோதரன் புருஷோதமனின் கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து அந்த பெண்ணின் கணவர் ரிபிஜெயாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த நாகராஜூ முயன்று உள்ளார். அப்போது, ரிபிஜெயாவுக்கும் நாகராஜூவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின் கோபமடைந்த ரிபிஜெயா,  நாகராஜூவை காரோடு தீ வைத்து எரித்துள்ளார். இதில் காருக்குள் சிக்கிய நாகராஜூ சம்பவ இடத்திலேயே உடல் கருதி இறந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சகோதரனின் கள்ளத்தொடர்பு பற்றி சமாதானம் பேச சென்ற ஐடி ஊழியரை காருடன் எரித்துக் கொன்று தப்பி ஓடியவர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர்.