தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மணி விழுந்தான், திருவாச்சூர், ராமசேஷபுரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தலைவாசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து சிவகாமி (60), பெரியம்மாள் (60), ராமசாமி (58), பால்ராஜ் (25) ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.