கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 29 பேர் பலியான விவகாரம் தமிழகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலியான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலையில் அவர்களுக்கு அதிமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இத்தகைய சூழலில் திமுக அரசின் மெத்தன போக்காலும், நிர்வாகத் தோல்வியாலும் தற்போது சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நான் அங்கு செல்வதே பிரதானமாக அமைகிறது. இறப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்கும் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்திப்பதற்கும் நான் கள்ளக்குறிச்சிக்கு செல்ல இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.