
பாஜக தொண்டர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்களை ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து கைது செய்துள்ளார்கள்.
மக்கள் பிரச்சினைக்காகவும் கள்ளச்சாராயம் சாவுக்காகவும் தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டுவதற்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள். திமுகவிற்கும் கள்ள சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது. வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட இன்னும் வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் இன்னும் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.