பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் துணை கேப்டன் பதவியை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியக்கோப்பை தோல்விக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சலசலப்பு ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறது. பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமுக்கு மற்ற அணியினருடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், சூப்பர்-4ல் தோல்வியடைந்து, எதிர்பாராதவிதமாக போட்டியில் இருந்து வெளியேறியது. இருப்பினும், இந்த போட்டி முழுவதும் கேப்டனாக பாபர் அசாம் எடுத்த முடிவுகள் குறித்து சில வீரர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், பாகிஸ்தானின் டிரஸ்ஸிங் அறையில் இரண்டு பிரிவுகள் இருப்பதாக பல தகவல்கள் கூறுகின்றன, சில வீரர்கள் பாபர் ஆசாமின் தலைமையை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். இலங்கையின் தோல்விக்குப் பிறகு, டிரஸ்ஸிங் அறையில் பாபர் ஆசாம் மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது.

வியாழக்கிழமை இலங்கையிடம் தோல்வியடைந்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடி இடையே வார்த்தைப் போர் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்ககள் தெரிவித்தது. ஷாஹீன் அப்ரிடி குறைந்தபட்சம் சிறப்பாக செய்தவர்களையாவது பாராட்ட வேண்டும் என்று கேட்டபோது, ​​பாபர் அணியின் மூத்த வீரர்களை விமர்சித்தார். அதற்குப் பதிலளித்த பாபர், யார் நன்றாகச் செய்கிறார்கள், யார் செய்யவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என பேசியுள்ளார். பின்னர் முகமது ரிஸ்வான் தலையிட்டு பிரச்சனையை தீர்த்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், பாகிஸ்தான் துணை கேப்டன் ஷதாப் கானும் பாபர் அசாம் குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். பாபர் அசாம் களத்திலும் வெளியேயும் வித்தியாசமான ஆளுமை கொண்டவர் என்று ஷதாப் கான் கூறினார். பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் ஷதாப் கான், பாபர் ஆசாமின் கேப்டன்சி குறித்து திடுக்கிடும் கருத்து தெரிவித்துள்ளார். களத்தில் பாபர் ஆசாமின் கேப்டன்ஷிப்பை தனக்கும் அவரது அணியினருக்கும் உண்மையில் பிடிக்கவில்லை, ஆனால் களத்திற்கு வெளியே அவருடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று சுழற்பந்து வீச்சாளர் கூறியுள்ளார். பாபர் அசாம் கேப்டனாக களம் இறங்கியவுடன் அவரது ஆளுமை முற்றிலும் மாறுகிறது என்று பாகிஸ்தான் துணை கேப்டன் கூறினார்.

அதாவது, “நாங்கள் களத்தில் பாபர் அசாமுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, ஏனெனில் அவர் களத்தில் முற்றிலும் மாறுபட்டவர், ஆனால் களத்திற்கு வெளியே நாங்கள் அவரை மிகவும் ரசிக்கிறோம்,” என்று ஷதாப் கூறினார்.

இதற்கிடையே  ஆசியக்கோப்பையில் சரியாக செயல்படாத ஷதாப் கான் துணைகேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை கேப்டன் பதவியில் இருந்து ஷதாப்பை நீக்க பிசிபி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள பிசிபி வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் ஷாஹின் அப்ரிடி துணை கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.