தெலுங்கானா மாநிலத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ஒரே மாதத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி (21) மற்றும் வினய் (23) ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாகக் காதலித்து வந்தனர். பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ம் தேதி இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

ஆனால், திருமணமான சில நாட்களிலேயே அஞ்சலி செல்போனில் நீண்ட நேரம் பேசுவதாக வினய் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அஞ்சலியை அவரது பெற்றோர் வீட்டில் வினய் கொண்டு போய் விட்டுள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த அஞ்சலி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஐதராபாத்தில் வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த வினய்க்கு இந்தத் தகவல் தெரியவந்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக தனது தந்தைக்கு போன் செய்து கதறி அழுத வினய், தனது நண்பர்களுக்கு இருக்கும் இடத்தின் ‘லொகேசனை’ வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவிட்டு, அங்கிருந்த மரத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான ஒரே மாதத்தில் காதல் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.