தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக தர்ம செல்வன் என்பவரை திமுக தலைமை புதிதாக நியமித்து உத்தரவிட்ட நிலையில் இவர் கலெக்டர் மற்றும் எஸ்பி உட்பட அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக கூறும் ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஆடியோவில் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் எந்த அதிகாரிகளும் என்னை மீறி செயல்படக்கூடாது. நீங்கள் நினைக்கும் ஆட்களை மாற்ற முடியாது நான் லெட்டர் வைத்தால் மட்டும் தான் மாற்ற முடியும். மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் நான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் இல்லை எனில் கதை முடிந்து விடும்.

கேம் விளையாட இங்க இடம் கிடையாது. நான் சொல்வதைக் கேட்கும் நபர்களுக்கு மட்டும்தான் இடம் கொடுக்கப்படுமே தவிர நான் சொல்வதைக் கேட்கவிடில் அவர்களை உடனடியாக தூக்கி எறிந்து விடுவோம் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன்மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது. ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது. ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும்.