கரூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய், கரூரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அவரின் உரைக்குப் பின்னர், கூட்டம் கலைந்து செல்லும் தருணத்தில் ஏற்பட்ட நெரிசலால் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர் என்பதும், பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டிய கோரிக்கையுடன், தவெக. சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் இல்லத்தில் நேரில் முறையீடு செய்யப்பட்டது.
மேலும், அந்த கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டதுடன், திட்டமிட்டு சதி நடத்தப்பட்டதாகவும் தவெக. தரப்பு புகார் தெரிவித்துள்ளது. இந்த மனு, நாளை பிற்பகல் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
