
திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹோமராஜ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை;
தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். முக ஸ்டாலினின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள , வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்.